சென்னை: மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிக வசூல் வேட்டை செய்த படமாக கொண்டாடப்பட்டது. 20 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த திரைப்படம் 240 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி மிகப்பெரிய லாபத்தை கொடுத்ததாக கூறப்பட்டது.
பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம் வெளியானதும் ஒரேயடியாக தெலுங்கு திரையுலகம் பாக்ஸ் ஆபிஸில் டாப் இடத்துக்கு சென்று விட்டது. தமிழ், இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்து வசூல் வேட்டையை குவிக்கும் படங்கள் குவிந்தன.
ஆனால், இதுவரை இந்த ஆண்டு 1100 கோடி வசூலுடன் பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியளவில் வெளியான படங்களில் டாப் 5 இடங்களை வசூலில் பிடித்திருக்கும் படங்களின் பட்டியலை இங்கே பார்ப்போம் வாங்க..
1. கல்கி 2898 ஏடி: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 1150 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வமாக படக்குழு 1000 கோடி வசூல் வரை அந்த படம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் வசூலை தாண்டி ஓடிடி, சாட்டிலைட் உரிமம், ஆடியோ ரைட்ஸ் என தயாரிப்பு நிறுவனத்துக்கு அந்த படம் லாபகரமான படம் என்றே கூறுகின்றனர்.
2. ஸ்ட்ரீ 2: ஷாருக்கானின் பதான், ஜவான், டன்கி உள்ளிட்ட படங்கள் கடந்த ஆண்டு பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸை உச்சாணி கொம்புக்கு உயர்த்திய நிலையில், இந்த ஆண்டு வசூல் வேட்டையாட ஒரு படம் கூட கிடைக்கவில்லையே என கவலைப்பட்டுக் கொண்டிருந்த பாலிவுட்டுக்கு ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ் நடிப்பில் வெளியான ஸ்ட்ரீ 2 பேய் படம் 750 கோடி வசூலை குவித்துள்ளது. பாகுபலி 2 மற்றும் ஷாருக்கானின் ஜவான் உள்ளிட்ட படங்கள் இந்தி பெல்ட்டில் செய்த வசூல் சாதனையை ஸ்ட்ரீ 2 முறியடித்துள்ளது.
3. ஃபைட்டர்: பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்த ஃபைட்டர் திரைப்படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 337 கோடி ரூபாயை எடுத்துள்ளது. பதான் படம் போல இந்த படமும் 1000 கோடி வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் வசூல் குறைவு தான்.
கோட்: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், யோகி பாபு என பலர் நடித்து கடந்த வாரம் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் 4 நாட்களில் 288 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 5வது நாளான நேற்றும் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இதுவரை 323 கோடி ரூபாய் வசூலை கோட் படம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக 500 கோடி வரை வசூல் வர வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
5. ஹனுமான்: பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெறும் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஹனுமான் திரைப்படம் அதிகபட்சமாக 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 200 கோடிக்கும் அதிகமான வசூலை மேலும், அரை டஜன் படங்கள் அள்ளியுள்ளன. இந்த ஆண்டு தமிழில் வேட்டையன், கங்குவா படங்கள் பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி filmibeat