மும்பை: இந்திய அணி வரிசையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான முகமது ஷமி இப்போதைக்கு தன்னை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என கூறி இருக்கிறார். அதனால், இந்திய டெஸ்ட் அணி இக்கட்டான நிலையில் உள்ளது. தற்போது இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. அடுத்த ஐந்து மாதங்களில் இந்திய அணி பத்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் முகமது ஷமி உள்ளனர்.
பும்ரா வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார். ஆனால், முகமது ஷமி அந்த தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. தேர்வு குழுவினர் தான் இந்த முடிவை எடுத்தார்கள் என முதலில் சொல்லப்பட்ட நிலையில், தற்போது முகமது ஷமி தாமாகவே தன்னை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டது தெரிய வந்துள்ளது. 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை முடிவில் முகமது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டு இருந்தது. அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், அதன் பின் நீண்ட கால ஓய்வில் இருந்தார். தற்போது அவர் மீண்டும் பயிற்சி செய்ய துவங்கி இருக்கிறார். ஒரு மாத காலத்திற்கு அவர் பயிற்சி மேற்கொண்டதை அடுத்து வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தான் முழு உடற் தகுதியை பெற்ற பின்னரே இந்திய அணிக்கு திரும்ப விரும்புவதாக அவர் அறிவித்து இருக்கிறார். ஒரு டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடும் போது திடீரென தனக்கு ஏதேனும் அசௌகர்யங்கள் ஏற்பட்டால் அதனால் மீண்டும் அணியை விட்டு விலக நேரிடும் என்பதால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி அதில் தனது உடற் தகுதியை நிரூபிக்க விரும்புகிறார். அதன் பின்னரே இந்திய டெஸ்ட் அணியில் தன்னை தேர்வு செய்யுங்கள் என அவர் பிசிசிஐ-க்கு தெரிவித்து இருக்கிறார். அவரது முடிவை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ வங்கதேச டெஸ்ட் தொடருக்கான அணியில் அவரை தேர்வு செய்யவில்லை. அதே சமயம் அவரது முடிவு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை பலவீனமாக மாற்றி உள்ளது. அடுத்த பத்து டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை முகமது ஷமி அணியில் இருந்தால் சிலர் போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடியும். அதேபோல, தற்போது இந்திய டெஸ்ட் அணியில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் முதன்மை வேகப் பந்துவீச்சாளர்களாக உள்ளனர். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் போதிய அனுபவம் இல்லாததால் அது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிக்கலை ஏற்படுத்தலாம். எனினும், அதற்குள் முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்பி விடுவார் என கூறப்படுகிறது. அவர் அடுத்த மாதம் துவங்க உள்ள ரஞ்சி ட்ராபி தொடரில் விளையாட உள்ளார்.
நன்றி mykhel