இஸ்லாமாபாத்: 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அந்த தொடரில் இந்திய அணி பங்கேற்குமா? என்ற சந்தேகம் இன்று வரை நீடித்து வருகிறது. இந்திய அணி கடந்த 17 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்க வேண்டி இந்திய அணி, பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையே உள்ளது. இந்திய அணி சார்பில் இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
 
மறுபுறம் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்தியாவை பாகிஸ்தானுக்கு வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தது. இந்தியாவுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படும் எனவும். இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தும் லாகூரில் நடத்தப்படும் என்றும் கூறி இருந்தது. மேலும், லாகூரில் போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்கள் தனி விமானத்தில் இந்தியாவுக்கே செல்லலாம் எனவும், இந்திய அணி ஆடும் ஒவ்வொரு போட்டிக்கும் பாகிஸ்தானுக்கு வந்து ஆடிவிட்டு அன்றைய தினமே இந்தியாவுக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் கூறி இருந்தது.
 

ஆனால், இதற்கும் பிசிசிஐ ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்திய அணிக்காக போட்டி அட்டவணையில் சில மாறுதல்களை செய்ய முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியா ஆடும் போட்டிகளை துபாய் அல்லது சார்ஜாவில் நடத்தும் வகையில் போட்டி அட்டவணையை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒப்புக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது..

ஏனெனில், இப்போதே போட்டி அட்டவணையை இறுதி செய்தால்தான் அந்தத் தொடரை எந்த சிக்கலும் இன்றி நடத்த முடியும். எனவே, பிசிசிஐ மற்றும் இந்திய அரசின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருந்தால் பின்னர் போட்டி அட்டவணையை மாற்றுவதில் சிக்கல் எழும் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்த மாற்று ஏற்பாடுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம், அதிகாரப்பூர்வமாக எந்த போட்டி அட்டவணை மாற்றத்தையும் நாங்கள் செய்யவில்லை. அனைத்து போட்டிகளும் பாகிஸ்தான் மண்ணில் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கூறி உள்ளது. 

எட்டு அணிகள் பங்கேற்க உள்ள இந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி துவங்கி மார்ச் 9 அன்று முடிவடையும் வகையில் உத்தேச அட்டவணை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியா ஆடும் போட்டிகள் துபாய் அல்லது சார்ஜாவில் நடத்தப்பட்டால் இந்த அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Nandri mykhel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *