டாக்கா: பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அங்கு இடைக்கால அரசின் தலைமை அட்வைசராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஷ் செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஹெஃபாசாத் இ இஸ்லாம் அமைப்பின் தலைவரான மாமுனுல் ஹக்கை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2009 முதல் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக செயல்பட்டு வந்தார். கடந்த மாதம் 5ம் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உயிருக்கு பயந்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டம் தான் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பியது. தற்போது ஷேக் ஹசீனா நம் நாட்டில் ரகசிய இடத்தில் உள்ளார். இதையடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனிஸ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் இடைக்கால அரசின் தலைமை அட்வைசரான முகமது யூனுஷ், ஹெஃபாசாத் இ இஸ்லாம் அமைப்பின் தலைவர் மாமுனுல் ஹக்குடன் சந்தித்துள்ளது தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதாவது இவர்கள் 2 பேரும் வங்கதேச தலைநகர் டாக்காவில் சந்தித்து பேசி உள்ளனர். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ஹெஃபாசாத் இ இஸ்லாம் அமைப்பு மற்றும் அதன் தலைவர் மாமுனுல் ஹக் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த ஹெஃபாசாத் இ இஸ்லாம் அமைப்பு என்பது 2010ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இஸ்லாமிய அடிப்படை குழுவாகவும், பிரிவினைவாத குழுவாகவும் இது செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதை இந்த அமைப்பு பின்பற்றி வருகிறது. தற்போதைய காலத்துக்கு ஏற்ப அரசியல் மாற்றங்களை இந்த அமைப்பு எதிர்த்து வருகிறது. சமூகத்தில் பெண்களுக்கான சீர்த்திருத்தம் மேற்கொள்வதையும் இந்த அமைப்பு எதிர்க்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மதராசாக்கள் அமைப்பது, அதன்மூலம் இஸ்லாமிய கொள்கைகளை போதிப்பது, இஸ்லாமிய புரட்சி தொடர்பான கருத்துகளை மக்களிடம் பரப்புவதை தான் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக உள்ள மாமுனுல் ஹக் நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எப்போதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் வன்மத்தை கக்கி வருபவர் தான் மமுனுல் ஹக். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்துக்கு பயணித்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியில் மாமுனுல் ஹக் கைது செய்யப்பட்டார். ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக வன்முறையை தூண்டியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்து சிறையில் அடைத்தார்.
ஆனால் ஷேக் ஹசீனா கடந்த மாதம் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்த நிலையில் பலர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அப்படி விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் மாமுனுல் ஹக். இத்தகைய சூழலில் தான் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை அட்வைசர் முகமது யூனுஷ் அவரை சந்தித்து இருப்பது நம் நாட்டுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளார். இருப்பினும் அவர்கள் எந்த மாதிரியான பேச்சுவார்த்தை நடத்தினர்? என்பது பற்றிய எந்த விபரமும் வெளியாகவில்லை.
நன்றி oneindia