லக்னோ: இராணி கோப்பையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் நட்சத்திர தொடக்க வீரரான அபிமன்யூ ஈஸ்வரன் 9 ரன்களில் இரட்டை சதத்தை மிஸ் செய்து வெளியேறியுள்ளார். இதனால் விரக்தியில் பெவிலியன் திரும்பிய அவருக்கு, ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இராணி கோப்பையில் வலிமையான மும்பை அணியை எதிர்த்து ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் விளையாடுவதால், சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட பலரும், இராணி கோப்பையில் விளையாடி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 141 ஓவர்களில் 537 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக நட்சத்திர இளம் வீரர் சர்ஃபராஸ் கான் 286 பந்துகளில் 4 சிக்ஸ், 25 பவுண்டரி உட்பட 222 ரன்களை விளாசினார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி சார்பாக முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி களமிறங்கியது. 3வது நாள் ஆட்டம் நேர முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் 151 ரன்களுடன், துருவ் ஜுரெல் 30 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தை இருவரும் சிறப்பாக தொடங்கினர்.
சிறப்பாக ஆடிய துருவ் ஜுரெல் 68 பந்துகளில் அரைசதத்தை எட்ட, இருவரும் விரைவாக ரன்களை குவிக்க தொடங்கினர். இதனால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் ஸ்கோர் 350 ரன்களை கடந்தது. அதேபோல் அபிமன்யூ ஈஸ்வரன் 200 ரன்களுக்கு அருகிலும், துருவ் ஜுரெல் சதத்தையும் நெருங்கினர். அப்போது துருவ் ஜுரெல் ஷாம்ஸ் முலானி பவுலிங்கில் 93 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்த 2 ஓவர்களில் அபிமன்யூ ஈஸ்வரனும் 292 பந்துகளில் ஒரு சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 191 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் உணவு இடைவேளையின் போது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் ஸ்கோர் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 400 ரன்களாக இருந்தது. இரட்டை சதத்தை எட்ட முடியாமல் அபிமன்யூ ஈஸ்வரன் களத்தில் இருந்து விரக்தியுடன் வெளியேறினார். இவருக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ரஞ்சி டிராபி தொடரில் இரட்டை சதம், துலீப் டிராபி தொடரில் 2 சதங்களை விளாசிய அபிமன்யூ ஈஸ்வரன், தற்போது இராணி கோப்பையிலும் சதம் விளாசி அசத்தி இருக்கிறார். இதனால் இந்திய அணிக்காக 3வது தொடக்க வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா மண்ணில் எப்போது பேக் அப் தொடக்க வீரர்கள் தான் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளனர். கடந்த 2 முறையும் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணிக்கு வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். இதனால் அபிமன்யூ ஈஸ்வரனை 3வது தொடக்க வீரராக தேர்வு செய்து இந்திய அணி அழைத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி mykhel