ஆதார் அட்டை புதுப்பிப்பிற்கும் ரேஷனில் பொருட்கள் வாங்குவதற்கும் தொடர்பு இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கிய அடையாள அட்டையாக இருந்து வருகிறது. வங்கி பரிவர்த்தனை, அரசின் திட்டங்களைப் பெற என பல்வேறு செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அதே நேரம் 10 ஆண்டுகள் பழமையான ஆதாரை புதுப்பிக்கும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது. செப்.14-வரை ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆதாரில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படாது என சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக வதந்தி பரவி வந்த நிலையில் தமிழக அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், “ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் கார்டுதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையெழுத்து பெற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தினால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை. ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண் கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவல்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.