சென்னை: சென்னை அம்பத்தூரில் ஐடிஐ மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன், ரூ.125 கோடியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானத்தையும் திறந்துவைத்தார்.
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும்பயிற்சி துறையின் ஆணையர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 102 அரசு ஐடிஐக்களும், 306 தனியார் ஐடிஐக்களும் இயங்கி வருகின்றன. தொழிற்சாலைக்கு தேவையான திறன் பெற்ற மனிதவளத்தை தொடர்ந்து கிடைக்கச் செய்வதில் ஐடிஐக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.
இளைஞர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று நல்ல வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், மோட்டார் வாகன மெக்கானிக், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்கண்டிஷனிங் மெக்கானிக்போன்ற தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதேபோல் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ், ஸ்மார்ட் போன் ஆபரேட்டர், ஃபயர்டெக்னாலாஜி, அட்வான்ஸ்டு மெஷின்டூல் போன்ற நவீன தொழிற்பிரிவுகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து மேனுபேக்ஸரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள் உள்ளிட்ட தொழிற் பிரிவுகளில் சென்ற ஆண்டு முதல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பிரிவுகளில் கடந்த ஆண்டில் பயின்ற மாணவர்களில் 80 சதவீதத்துக்கு அதிகமானோர் பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஐடிஐக்களிலும் நேற்று முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இதன் ஒருபகுதியாக சென்னை அம்பத்தூர் ஐடிஐயில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பயிற்சியை தொடங்கிவைத்து மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
மேலும் இலவச சீருடைகள், பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், கட்டணமில்லா பேருந்து சலுகை அட்டைகள் ஆகியவற்றையும் வழங்கினார். ஐடிஐக்களில் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்தையும் அமைச்சர் வெளியிட்டார்.
இதுதவிர அந்த ஐடிஐ வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானம் ஹெச்சிஎல் பவுண்டேசன் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.1.25 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை செயலர் கொ.வீரராகவராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி hindutamil