புதுடில்லி: அமெரிக்க அரசின் கடன் மதிப்பு, முதல் முறையாக 2,900 லட்சம் கோடி ரூபாயை கடந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, அமெரிக்காவின் மொத்த கடன் மதிப்பு, கடந்த திங்களன்று 2,900 லட்சம் கோடி ரூபாயை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தான் அந்நாட்டின் மொத்த கடன் மதிப்பு 2,800 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய நிலையில், அடுத்த ஆறே மாதங்களில் 2,900 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நடப்பு காலாண்டில், அமெரிக்க அரசின் கடன் குறித்த மதிப்பீட்டையும் நிதித்துறை குறைத்துள்ளது.
இதன்படி, நடப்பு ஜூலை – செப்டம்பர் காலாண்டில் அரசின் நிகர கடன் கிட்டத்தட்ட 61 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணித்துள்ளது. இதற்கு முன்பு, 70 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணித்திருந்தது.
இதுமட்டுமல்லாமல், நடப்பு செப்டம்பர் காலாண்டின் முடிவில் அரசின் கையிருப்பு, 71 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
மேலும், அரசின் நிதி இருப்பு, நடப்பாண்டு இறுதி வரை போதுமானதாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.