சென்னை: நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தனுஷ் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார். இந்த ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ராயன் திரைப்படம் 150 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாக காத்திருக்கிறது.
அந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திற்கு இட்லி கடை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. குபேரா எனும் தெலுங்கு படத்திலும் இளையராஜா பயோபிக் படத்திலும் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இடையே இட்லி கடை படத்தையும் தனுஷ் தொடங்கி உள்ள நிலையில், அந்த படத்தில் தனுஷின் தம்பியாக அசோக் செல்வன் நடிக்கப் போவதாக சில தகவல்கள் சோஷியல் மீடியாவில் உலா வந்த நிலையில், அதற்கு அதிரடியாக அசோக் செல்வன் மறுப்பு தெரிவித்துள்ளார். டென்ஷனாகும் பிரபலங்கள்: தளபதி 69 படத்தில் சிம்ரன் நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் பரவிய நிலையில், கடுப்பான சிம்பு காட்டமாக போட்டிருந்த ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. நடிகை சிம்ரன் தளபதி 69 படத்தில் நடிக்கப் போவதில்லை என்பதையே அவரது ட்வீட் உணர்த்துவதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், அதே போன்ற ஒரு பதிவை அசோக் செல்வனும் தற்போது வெளியிட்டுள்ளார். இட்லி கடை: ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ் இந்த ஆண்டு ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். அவருக்கு தம்பிகளாக சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தனர். தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். தனது அக்கா மகனை ஹீரோவாக்கி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியுள்ள தனுஷ் அடுத்ததாக இட்லி கடை படத்தை ஆரம்பித்துள்ளார். அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அருண் விஜய் வில்லனாக நடிக்கப் போவதாகவும், ஷாலினி பாண்டே முக்கிய ரோலில் நடிக்கப் போவதாகவும் அசோக் செல்வன் தனுஷின் தம்பியாக நடித்து வருகிறார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பின.
அசோக் செல்வன் அதிரடி: தனுஷ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால், தற்போது அவர் இயக்கி வரும் இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை. தவறான தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது என அதிரடியாக ட்வீட் போட்டு விளக்கம் கொடுத்துள்ளார் அசோக் செல்வன். இளையராஜா பயோபிக் என்ன ஆச்சு?: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் தன்னை பிசியாக வைத்திருக்கும் நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் இளையராஜா பயோபிக் படம் என்ன ஆனது என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஹீரோவாகவும், இயக்குநராகவும் தனுஷ் ரவுண்டு கட்டி வேலை பார்த்து வருகிறாரே அவரால் எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது என்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சுக்கள் நிலவி வருகின்றன. இளையராஜா பயோபிக்கை ஓவர்டேக் செய்து விட்டு இட்லி கடை ஆவி பறக்க சுடச் சுட ரெடியாகி விடும் என்று தான் தெரிகிறது. இந்த ஆண்டு ராயன் படம் தனுஷுக்கு வெற்றியை தந்தது போல அடுத்த ஆண்டு இட்லி கடை வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
நன்றி filmibeat